இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா செயற்பட்ட போதிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு முக்கியம் என்ற கொள்கையை அங்கீகரித்து பண்டா செல்வா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் இடது சாரிகள் அவ் ஒப்பந்தத்தை பாதுகாக்க முன்வராமல் அவர்கள் மேற்கொண்ட பாரிய தவறுகள் தான் இன்றிருக்கும் நிலைமையை ஏற்படுத்திவிட்டுள்ளது.இடது சாரிகள் இத் தவறுகளை செய்யாது அன்று அவ் ஒப்பந்தத்தை பாதுகாக்க முன்வந்திருந்தால் இலங்கையின் வரலாறு வித்தியாசமானதாக அமைந்திருக்கும் என்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண.
இந்தியாவில் அதிகாரப் பகிர்வு பிரச்சினையானது எவ்வாறு தீர்வு காணப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வினை நிலைநாட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினமானது நேற்றைய தினம்(26) யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுர்க்கத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழ் மக்களில் தந்தை தமிழ்த் தேசிய இனத்தின் தந்தை என்று தந்தை செல்வா அழைக்கப்பட்டிருந்தார். அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டபோது தான் தமிழ் மக்களின் தேசிய இனம் என்பது ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. சிங்கள மக்கள் தங்கள் தேசிய இனமானது சிங்க பாபுவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள்.தேசிய இனம் என்பது அண்மைக்கால வரலாற்றில் தோற்றம் பெற்ற எண்ணக்கருவும் செயற்பாடும் ஆகும். முதலாளித்துவம் என்பது வளர்ச்சி அடைந்த பின்னரே தேசிய இனம் என்பது வலுப்படத் தொடங்குகின்றது.
இலங்கையில் 1900 ஆண்டுகளின் பின்னரே தமிழர்கள் தேசிய இனமாக உருவாக்கம் பெறுகின்றார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கு முன்னரே உருவாக்கம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே அதனை வலியுறுத்தி ஈ.வி.ரே, பெரியார் போன்றோர் தலைமை தாங்கி போராட்டங்களை நடத்தினார்கள்.அக்காலத்தில் இந்தியாவில் நேரு போன்ற புத்திசாலிகள் இருந்தமையால் அப்போராட்டங்களை ஏற்று அங்கீகரித்து ஓர் சமநிலையை ஏற்படுத்தினார்கள்.
இலங்கையானது காலணித்துவ நாடாக இருந்தமையால் தமிழ் சிங்கள முஸ்லிம் தலைவர்கள் ஆங்கில மொழியின் மீது மதிப்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் இங்கிலாந்துபோல எல்லோரும் ஆங்கில மொழியிலேயே பேசக்கூடிய நிலையை முன்னெடுக்கமுடியும் எனக் கருதினார்கள். இதன் காரணமாகவே அனைத்துத் தலைவர்களும் ஓரணியில் இருந்து செயற்படமுடியுமாக இருந்தது.
ஆனால் பொது மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தமது மொழியிலும் சிங்கள மக்கள் தமது மொழியிலும் கற்று முன்னேறிக்கொண்ட காலத்தில் வாணிபப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் சிங்கள சமூகத்தின் ஆசாபாசங்களை பூர்த்தி செய்யவேண்டிய நிலைமை அன்றைய தலைமைக்கு ஏற்பட்டது.
செல்வநாயகமும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. 1926 ஆம் ஆண்டு பண்டா சமஸ்டி ஆட்சி முறையை கொண்டிருந்ததுடன் பின்னர் சிங்கள மகா சபையில் பதவி வகித்தபோது அந்தக் கொள்கையை முற்றிலும் மாற்றியமைத்து வேறு வகையான கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினார்.
ஆனால் தந்தை செல்வா நாட்டில் நடப்பவற்றை உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார். தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் பாதையில் தொடர்ந்து செயற்படமுடியாமல் அதிலிருந்து வெ ளியேறி தமிழரசுக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழரசுக் கட்சியால் உருவாக்கப்பட்டபோது அது சமஷ்டிக்குரிய பல பண்புகளைக் கொண்டிருந்தது. அத்துடன் நாட்டில் நீதியான நியாயமான ஜனநாயக மதம் சாராத சமத்துவ சமூகத்தை நோக்கி செயற்படவேண்டும் போன்ற அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருந்தது.
ஆனால் தென்னிலங்கையில் பெரும்பான்மை சமூகமானது இந்தப் பண்புகளை மறந்து தமிழரசு என்ற பதத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அது இலங்கையில் தமிழர் அரசு ஒன்றைத் தோற்றுவிக்கப் போகின்றது என்ற பயத்தையும் பூச்சாண்டியையும் ஏற்படுத்தினார்கள் இன்றும் தென்னிலங்கையில் தந்தை செல்வாவுக்கு எதிராக தவறான கருத்துக்களும் பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
1956 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.டி.பண்டாரநாயக்க சிங்களம் மாத்திரம் தான் அரச கரும மொழி என்று செயற்பட்டபோதிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு முக்கியத்துவம் என்ற கொள்கையை அங்கீகரித்து 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது. அக்காலத்தில் இடதுசாரிகள் மொழிகளுக்கிடையிலே சமத்துவம் வேண்டும் என்று கருதினார்களே தவிர அதிகாரப் பகிர்வு தேவை என்றஅடிப்படையில் அதனைப் பாதுகாக்க அவர்கள் முன் வரவில்லை.அது பாரதூரமான தவறாகவே கருதுகின்றேன்.
இடது சாரிகள்மேற்கொண்ட பாரிய தவறுதான் பண்டா செல்வா ஒப்பந்தத்தைப் பாதுகாக்க முடியாது போனது அப்படி பாதுகாத்திருந்தால் இன்றைய நிலைமையை நாங்கள் சந்தித்திருக்க தேவையில்லாது போயிருக்கும். இதன் பின்னர் இந்தத் தோல்விகளை பொறுமையாகத்தாங்கிக் கொண்டு செயற்பட்ட செல்வா 1965 ஆம் ஆண்டு டட்லி செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இதனையும் இடது சாரிகளே கடுமையாக எதிர்த்தார்கள் இரண்டு தடவைகள் செல்வநாயகமும் தோற்ற போதும் அவர் பொறுமையுடன் இருந்து தன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒருபோதும் அவர் தன் கொள்கைகள் கோட்பாடுகளை இடையில் கைவிடவில்லை.மகாத்மாகாந்தி போன்று அமைதியான போராட்டங்களையே மேற்கொண்டார்.
சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதும் தமது ஆதிக்கத்தின் கீழேதான் மற்றவர்கள் அடிபணிந்து செயற்படவேண்டும் என்ற நோக்கிலே செயற்படுகிறார்கள். இன்றும் இப் பிரச்சினை முடிந்தபாடில்லை. தமிழரசு என்பதும் உருவாகவில்லை. எனவே இன்றைய சூழலிலும் அந்த அபிலாசைகளை விட்டுக் கொடுக்க முடியாது. அதை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லவேண்டும்.தமிழர் தாயகத்தை நாம் மறந்து விடமுடியாது. தற்போதைய அரசை நாம் பல்வேறு வகையிலும் நிர்ப்பந்திக்கவேண்டியிருக்கின்றது
.நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னால் இன வாதிகள் மத வாதிகள் எல்லோரும் வெறியர்கள் போல் நடந்துகொண்டார்கள். ஆனால் அதனை எல்லோரும் இணைந்து தோல்வியுற செய்தோம். அதேபோல் எதிர்காலத்திலும் எங்கள் பயணம் ஒன்றிணைந்து அமையவேண்டும்.இந்தியாவில் எப்படி இப் பிரச்சினை தீர்வு காணப்பட்டதே அதேபோன்று இலங்கையிலும் அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வு நிலைநாட்டப்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் பூண வேண்டும் என்றார்.
-பாறுக் ஷிஹான்
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment