இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும்போது அது நிலைத்திருக்குமா? அல்லது ஆட்டங் கண்டுவிடுமா? என்ற மக்களின் ஆதங்கத்திற்கு மத்தியில் அரசாங்கத்திற்குள் இருக்கும் ஆளுங்கட்சிகளிடையே இருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் எதிரும் புதிருமான கருத்துக்கள் காரசாரமான முறையில் இருக்கின்றமை மக்கள் மத்தியில் ஒரு வகையான வெறுப்புத் தன்மைகளையே தோற்று வித்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் வரலாற்றில் இந்த நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இடம் பெற்ற யுத்த அழிவுகளில் இருந்து மக்கள் மீண்டுள்ள நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதானக் காலத்தில் மற்றறொரு யுத்தமாக இனவாத வன்முறைச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். ஒருசில குறுகிய மனங் கொண்ட கயவர்கள் இனங்களுக்கிடையில் குழப்ப நிலைமைகளைத் தோற்று வித்து குறிப்பாக சிறுபான்மை மக்கள் மீது அபாண்டமான பொய்களையும், இட்டுக்கட்டுக்களையும் பரப்பி வன்முறைகளை தோற்று வித்து வருகின்றனர். இன்று வரை இந்த இனவாத யுத்தம் இலங்கையில் சமயங்களுக்கிடையில் அமைதியற்ற நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே கவலைக்குரிய விடயங்களாகும்.
இவ்வாறானதொரு அபாயகரமான காலத்தில் இதுவரை காலமும் எதிரும் புதிருமாக இருந்து அரசாங்கங்களை அமைத்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றினைந்து ஏற்படுத்திய தற்போதைய தேசிய நல்லிணக்க கூட்டராங்கத்தின் நல்லாட்சி இலங்கையின் வரலாற்றில் ஒரு சிறந்த மற்றும் வரவேற்கத்தக்க ஒரு அரசாங்கமாகவே இந்த நாட்டு மக்களால் மட்டுமல்லாது சர்வதேசத்தினாலும்கூட பாராட்டப்பட்ட ஒரு அரசாங்கமாக திகழ்ந்ததுள்ளது எனலாம். இவ்வாறனதொரு அரசாங்கத்தினை நாட்டின் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் தமது பெறுமதியான வாக்குகளை எந்தவிதமான பிரதிபலன்களையும் எதிர்பாராது வழங்கி ஆட்சிப்பீடம் ஏற்றியது எனலாம். இவ்வாறு ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கத்தில் இதுவரை காலமும் மக்கள் தமது அதீத நம்பிக்கையை வைத்திருந்தனர் என்றே கூறலாம்.
என்றாலும் இன்றைய நிலையில் இந்த தேசிய நல்லிணக் கூட்டாட்சி அரசாங்கம் என்று கூறப்பட்டும் இந்த அரசாங்கத்தின் திசை வேறு வழியில் குறிப்பாக மக்களின் அபிலாசைகள், அவர்களின் நலன்களில் அக்கறை காட்டாது ஒருவருக்கொருவர் தத்தமது குற்றங்களையும், குறைகளையும் கூறிக் கொண்டு தமது எதிர்பார்த்த இலக்குகளுக்கு அப்பால் தத்தமது கட்சிகளை வளர்க்கும் ஒருவகையான போட்டித் தன்மைகளில் சென்று கொண்டிருப்பதானது மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையின்மையையும், சந்தேகத்தினையும் தோற்று வித்துள்ளது.
குறிப்பாக இந்த அரசு ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு தேர்தல் களத்தில் நின்றபோது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பல இன்று பொய் வாக்குறுதிகளாக எதனையும் கண்டு கொள்ளாத தன்மைகளில் சென்று கொண்டிருப்பதுடன் இன்றோ அல்லது நாளையோ என்ற வகையில் இருப்பதனை காண முடிகின்றது. முக்கியமாக மக்கள் முற்றிலும் ஏமாந்த ஒரு நிலையிலேயே இன்று இருக்கின்றனர். வழங்கிய வாக்குறுதிகள் பொய்யானதாகவும் அவர்கள் தத்தமது சுய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்கள் நலன்களுக்கு அப்பால் தவறான பாதையில் பயனித்துக் கொண்டிருப்பதை அரசியல் ஆய்வாளர்களும், புத்தி ஜீவிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அரசின் பங்காளிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் வித்தியாசமான போக்கில் அரசின் கொள்கை மற்றும் சிந்தனைகள் என்பனவற்றிற்கு அப்பால் கருத்துக்களை தெரிவிப்பதால் அவர்களுக்கிடையில் விரிசல் நிலைமைகள் ஏற்பட்டு வினைத்திறனின்மை, மற்றும் தூர நோக்குச் சிந்தனை என்பன செயழிழந்து நாடு மென்மேலும் அழிவுப் பாதையின் பக்கம் செல்வதனையே இந்த அரசின் நடவடிக்கைகள் கோடிட்டுக்காட்டுகின்றன.
நல்லாட்சி என்ற வீராப்புடன் இந்த நாட்டில் அரசாங்கத்தினைப் பொறுப்பேற்ற போதிலும் மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் பல்வேறுபட்ட முட்டுக்கட்டைகள், பிரச்சினைகள் காரணமாக தமது நிருவாகத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியாத ஒரு தண்டாடும் நிலைமைகளை நாம் காண்கின்றோம். குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரச்சினை என்ற ஒரு விடயமும் இந்த அரசை தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றதையும் குறிப்பிடலாம். இந்த விடயமும் இன்று அரசாங்கத்தின் இருப்பில் ஒரு சந்தேக நிலைமைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த துர்ப்பாக்கியமான நிலைமைகள் சாதாரண விடயமல்ல மிகவும் ஆபத்தானதொரு விடயத்தினையே காட்டி நிற்கின்றது.
கட்சிகளுக்குள் இருக்கும் அமைச்சர்கள் தத்தமது பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளாது ஒருசில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சுய இலாபத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம் பெற்றது போன்ற கலாசார முறையில் செல்வது ஜனாதிபதியால் கண்டறியப்பட்டு அவர் மாற்றம் ஒன்று தேவை என்ற அடிப்படையில் அடிக்கடி அமைச்சரவை மாற்றங்களைச் செய்து வருகின்றார். இவ்வாறு அவர் அமைச்சரவைக்குள் மாற்றங்களை கொண்டு வருவதால் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது என்பதே யதார்த்தமான உண்மைகளாகும் என்ற விடயத்தினை கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் இந்த நாட்டில் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளே காணப்படுகின்றன. குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் யுத்தத்தால் நேரடியாகவே பாதிக்கப்பட்டு பல்வேறுபட்ட யுத்த வடுக்களுடனும், பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடன் பல்வேறுபட்ட இடங்களில் அகதிகளாகவும் வாழ்ந்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் இன்று வரை ஆக்கபூர்வமானவையாக நிறைவேற்றப்பட வில்லை. இந்த மக்களை அரசாங்கம் மாற்றான்தாய் மனப்பான்மையிலேயே கண்டு கொண்டு வருகின்றது. இவர்களின் எந்த விதமான கோரிக்கைகளும் கவனத்திற் கொள்ளப்படாது இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகவே பாதிக்கப்பட்ட மக்களால் நோக்கப்படுகின்றது.
குறிப்பாக நீண்டகாலமாக எந்தவித விசாரணைனளுமின்றி பல்வேறுபட்ட சிறைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் முஸ்லிம் அரசியல் கைதிகளின் விடுதலைகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் இதுவரை கண்டு கொள்ளப்டாதிருப்பதும் முக்கியமான விடயங்களாகும். அத்துடன் மக்களின் தேவைகள் ஒரு சரியான முறைமையில் அட்டவணைப் படுத்தப்படாது ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அமைய இடம் பெறுகின்றதே தவிர அவை நிரந்தரமானவையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள், என்னங்கள் நிறைவேறும் வகையிலோ மேற்கொள்ளப்பட வில்லை எனலாம்.
இதனைவிட கடந்த சில வருடங்களாக பூதாகாரமாகியுள்ள இனவாதச் செயற்பாடுகளாகும். குறிப்பாக பெரும்பான்மை இனவாத தேரர்களைக் கொண்ட ஒருசில குண்டர் குழுக்களால் அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் சமய ரீதியான தாக்குதல்களாகும். இது இன்று கோடிக்கணக்கான சொத்து அழிவுகளுக்கும், பல அப்பாவி முஸ்லிம் நபர்களைப் பலியெடுத்த செயற்பாடுகளாகவும் அமைந்துள்ளது. இது இந்த நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளது.
இதேபோன்று இந்த நாட்டு மக்களின் பணத்தை சூறையாடிய ஊழல் மோசடிக்காரார்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்துவதென்ற தேர்தல் வாக்குறுதிகளாக காணப்படுகின்றது. மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் மிகவும் ஒரு மந்த கதியில் சென்று கொண்டிருப்பதானது மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான விருப்பக் குறைவையும், எதிர்ப்பலைகளையும் தாராளமாகவே வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த அரசாங்கத்தில் உள்ளவர்களின் செயற்பாடுகள் போன்று இந்த அரசிலும் ஒருசிலர் தமது கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு மேற்குறிப்பிட்ட முக்கிய விடயங்களில் அரசு நியாயமான முறையில் ஜனநாயக அம்சங்களின் அடிப்படையில் செல்லாது நகர்ந்து கொண்டிருப்பதால்தான் கடந்த பெப்பரவரி மாதம் 10ஆம் திகதி இடம் பெற்ற உள்ள10ராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆளும் கூட்டாட்சி அரசினையும்விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனைக் கட்சிக்கு மக்கள் தமது ஆதரவை வழங்க வழிவகுத்துள்ளது எனலாம்.
இவ்வாறு இந்த அரசாங்கம் தனது இலக்கினை மறந்து தத்தமது அரசியல் கொள்கைளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செல்வார்களானால் அது இந்த நாட்டின் அரசியல், பொருளாதார பின்னடைவுகளுக்கு உள்ளாகுவதுடன் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும், அவற்றின் கண்டனங்களுக்கும் உள்ளாகி சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு சங்கமான நிலைமைகளுக்கு செல்ல வேண்டி வரும் எனலாம்.
அரசாங்கத்தின் மேற்படி திறணற்ற செயற்பாடுகளை நோக்கும்போது மிகவும் கவலை தரும் நிலையிலேயே அது சென்று கொண்டிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னாள் ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். வாக்களித்த மக்களைப் பொருத்தவரை இன்று நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அத்துடன் சிறந்ததொரு மாற்றம் இல்லாவிட்டால் அது இந்த நாட்டின் எதிர்கால விடயங்கள் பாரிய பின்னடைவுகளை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்ற விடயம் தற்போது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றதையும் இங்கு குறிப்பிடலாம்.
அரசாங்கத்தின் உள்வீட்டுச் சண்டைகள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் விடயத்தில் பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி, தொழில் வாய்ப்புக்கள், சமய, சலாசார விடயங்களில் சரியான சமநிலை பேனப்படவில்லை. பாரபட்சங்களும், புறக்கணிப்புக்களுமே காட்டப்பட்டு வருகின்றன. இந்த விடயங்கள் சமுகத்தில் இனங்களுக்கிடையில் ஒருவிதமான கசப்புணர்வுகளையே தோற்று வித்து வருகின்றன.
இந்த வகையில் பார்க்கும்போது அரசாங்கத்தின் திறணற்ற செயற்பாடுகள் தொடருமானால் அது இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கமாக அமைவதுடன் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் கைங்கரியங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகங்களே இல்லை எனலாம். இதுவரையும் இந்த அரசு கூறிய பல விடயங்கள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக மட்டுமே காணப்படுவதுடன் மக்கள் ஏமாந்து கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலைமைகளே இருந்து வருகின்றது.
பல்லின சமய மற்றும் சமுகங்கள் வாழும் இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில் சகலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஆனால் இங்கு கடந்த சிலகாலமாக மக்கள் மத்தியில் புரிந்துணர்வுகள் இல்லாது பெரும்பான்மை என்ற ஒரேகாரணத்தினால் ஒருசில குறுகிய மனங் கொண்டவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் விடயத்தில் எப்போதுமே எதிரான முறையில் இந்த இரு சமுகங்களையும் ஓரங்கட்டும் வகையில் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுவது மிகவும் பாராதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது எனலாம்.
குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் விடயத்தில் இனவாத சக்திகள் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் அநாகரிகமான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளாகவே கண்டு கொள்ள முடிந்துள்ளது. இதன் ஒருசில கட்டங்களே அம்பாறை, கண்டிச் சம்பவங்கள் எனலாம். கண்டி திகனயில் மட்டும் முஸ்லிம்களின் சுமார் 850 கோடி ருபாய்கள் பெறுமதியான சொத்துக்களை சூறையாடியும், தீ வைத்து எரித்தும் நாசம் செய்துள்ளனர். இதற்கு யார் காரணம்? அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். இந்த விடயத்தில் இருந்து சிறிதும் அரசு ஒதுங்கிவிடவோ அல்லது பாராமுகமாக இருந்துவிடலோ முடியாது. சரியான முறையில் பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன் குறித்த அணைத்து இனவாத, மதவாத குண்டர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கோரிக்கைகளாகும்.
அரசாங்கம் நியாயமான முறையில் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தி பாதுகாப்புத் துறையினரை பாரபட்சமற்ற வகையில் வழிநடாத்தியிருந்திருந்தால் கடந்தகாலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றிருக்காது. கடந்த காலங்களில் சமயத் தலைவர்கள், தேரர்கள் என்ற போர்வையில் அவர்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு தகுந்த ஆதரங்களும், பிடிமானங்களும் இருந்த நிலையில் அவர்களை அரசு குற்றவாளிகளாக கண்டு கொள்ளாது மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருந்ததால்தான் அவர்கள் தமது அநியாயங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது எனலாம்.
எனவே அரசாங்கம் தமக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்கள், கருத்து முரண்பாடுகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு ஒன்றுமே செய்யாது மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வது அவ்வளவு ஆக்கபூர்வமான விடயங்கள் அல்ல என்றே கூறலாம். தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்காது வாக்களித்த மக்களின் நம்பிக்கை, அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் மக்கள் விரும்பும் வகையில் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
-சத்தார் எம் ஜாவித்
No comments:
Post a Comment