பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல் வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால்,அது, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலை குற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் முஸ்லிம் எம்பி க்கள் வாக்களிப்பது தொடர்பில் அவரிடம். வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்:
இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாரளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் போது, இலங்கை மக்கள் சில ஆச்சரியத்தக்க வகையிலான முடிவுகளை கண்டு கொள்ள முடியும் என நம்புகிறேன். பல கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் தாமாகவே முன் வந்து, எமது பிரேரணைக்கு ஆதரவு தரவுள்ளதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும், இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள் எவ்வாறு செயற்பட போகிறார்கள் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
இலங்கையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகள் அதிகரித்துள்ளன. இலங்கை அரசு, இந்த வன் முறைகளை கட்டுப்படுத்த போதியளவு நடவைக்கை எடுக்கவில்லை. கண்டி, அம்பாறை சம்பவங்கள் நடைபெறும் போது, ரணில் பிரதமர் எனும் பாரிய அதிகாரத்துக்கு மேலதிகமாக சட்ட ஒழுங்கு அமைச்சையும் வைத்திருந்தார். இது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த இன்னுமென்ன அதிகாரங்கள் வேண்டும். வேறு யாராவது சட்ட ஒழுங்கு அமைச்சை வைத்திருந்தால், தான் நினைத்ததை செய்ய முடியாதென, அவர், அதனை தன் கையில் வைத்திருந்தாரோ தெரியவில்லை. அப்படியும் சிந்திக்கக் கூடியவர் தான்.
இறுதியில் இக் கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னணியில் சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வரவுள்ளது. இதனை சர்வதேசமும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. இதன் போதான ஒவ்வொரு விடயங்களும் அணு, அணுவாக ஆராயப்படும். இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள், அமைச்சு போன்ற சுக போகங்களை முன் நிறுத்தி, பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவார்களாக இருந்தால், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளில், பிரதமர் ரணில் எந்த வித குற்றமும் அற்றவர் என்ற சான்றிதழை, முஸ்லிம் அரசியல் வாதிகளை வழங்கியதாக அமைந்து விடும்.
ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள், பாராளுமன்றத்தில் வீராப்புடன், சமூக தியாகிகள் போன்று குரல் கொடுத்துவிட்டு, ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் சென்று, ஜனாதிபதியை குற்றமற்றவராக காட்டி இருந்தனர். இது போன்ற செயற்பாடுகள் இன்னுமின்னும் தொடர்ந்தால், இவ்வரசினர் முஸ்லிம்களை இன்னுமின்னும் அடக்கி, ஒடுக்கி ஆள்வார்கள் என்பதில் ஐயமில்லை என அவர் குறிப்பிட்டார்.
-JO
No comments:
Post a Comment