தாயகத்தில் வியாபித்து வரும் இனவாதத் தீயினால் மூவினங்களையும் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களும் அவர்களின் சொத்துடமைகளும் காலத்திற்குக் காலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரமும் மிக மோசமாகக் கீழிறங்கி எமக்கும், எமது எதிர்காலச் சந்தததினருக்கும் பெரும் சுமையாக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையை எதிர்காலத்திலாவது முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்துவதற்கு தாய் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள நாமனைவரும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டியது அவசியமாகும்' என SLMDI UK அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் 1977ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக்
காலம் இடம்பெற்று வருகின்ற இனவாதத் தாக்குதல்கள் காரணமாக தாயகத்தையும், தாயக உறவுகளையும் பிரிந்து ஐக்கிய இராச்சியத்திலும், ஏனைய பிற நாடுகளிலுமாகப் புலம்பெயர்ந்து வந்து குடியேறியுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தினருக்குமாக SLMDI UK அமைப்பின் சார்பாக விடுக்கப்பட்டுள்ள இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் முதலாவது இனக்கலவரம் சுதந்திரத்திற்கு முன்னர் 1915ஆம் ஆண்டு சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கம்பளையில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரும் 1977, 1983, 1990, 2009, 2012, 2013, 2015, 2016, 2017 மற்றும் 2018களில் சிங்கள இனவாதிகளால் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்குக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாணம், தம்புள்ள, மஹியங்கனை, பேருவளை, அம்பாறை, திகன, கண்டி, அக்குறனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசாங்கத்தின் கட்டுக்காவலில் இருந்த வெலிக்கடை சிறைச்சாலையிலுமாக கட்டவிழ்த்து விடப்பட்டது.
2004ஆம் ஆண்டில் தமிழீழ விதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அரச கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்பட்ட இறுதிப் போரிலும், அதற்கு முன்னரான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலுமாக ஏராளமான அப்பாவித் தமிழ் மக்களும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்துடமைகளும் அழிக்கப்பட்டன. இறுதிப் போரின்போது அரசாங்கப் படைகளிடம் நிராயுதபாணிகளாய்ச் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான இனவாதத் தாக்குதல்களால் பல்லாயிரம் இலங்கையர்கள் படுகொலையாகியும், ஊனமுற்றும் இருப்பதுடன், பல்லாயிரம் கோடி ரூபாய்
பெறுமதியான பொருளுடமைகள் தீயிடப்பட்டும், கொள்ளையிட்டும் அழிக்கப்பட்டுள்ளன.
இவ்விழப்புக்கள் அனைத்தும் தனியொரு இனத்திற்கான, சமூகத்திற்கான இழப்பாக ஒவ்வொரு இனவன்முறைச் சம்பவங்களும் நடைபெற்ற காலப்பகுதிகளில் கருதப்பட்டு வந்துள்ள போதிலும் இவையனைத்தும் உண்மையில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், தாயகத்தின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குமாக ஏற்பட்ட, இன்று வரைக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஈடுசெய்ய இயலாதிருக்கும் பாரிய இழப்புக்களேயாகும் என்பதை நாம் உற்றுணர வேண்டும்.
எனவே, இவ்வாறான இழப்புக்களும், இனவாத வன்முறைகளும் இனிமேலாவது நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் இடம்பெறாதவாறு கூர்மையாகக் கண்காணித்துப் பாதுகாக்க வேண்டிய பாரிய கூட்டுப் பொறுப்பானது, ஐக்கிய இராச்சியத்திலும், ஏனைய நாடுகளிலுமாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குரியதாகும்.
ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் இத்தகைய வன்முறைகளால் புலம்பெயர்ந்து வந்து வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுகள் தத்தமது சமூகங்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பல்வேறு பெயர்களிலுமாக அமைப்பு ரீதியாக இயங்கி வருவதனைக் காண முடிகின்றது. எனினும் இவ்வாறு நாம் தொடர்ந்தும் இன ரீதியாக அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு இயங்கி வருவதும் ஒரு வகையில் நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் இனவாதச் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கே வழிகோலும் என்பதனையும் நாம் உற்றுணர்ந்து கொள்ள
வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் புலம்பெயர் அமைப்புக்கள் இவ்வாறு தனித்தனியாக புலம்பெயர் நாடுகளில் இயங்கி தாயகத்திலுள்ள தத்தமது சமூகங்களுக்கும், உறவுகளுக்கும் அவர்களின் வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி மற்றும் கல்வி, தொழில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கி வருவதை நாம் வரவேற்கின்ற போதிலும் இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு சமூகத்திற்கும் நாம் ஆதரவளித்துச் செயற்படக்கூடாது என்பதையும் நாம் இத்தருணத்தில் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றோம். இவ்வாறு ஒரு திடகாத்திரமான கொள்கையை நாம் பின்பற்றுவதன் மூலமே இனவாதமில்லாத ஸ்ரீலங்கா தாயகத்தை எதிர்காலத்தில் எம்மால் கட்டியெழுப்ப முடியும்.
இலங்கையில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் காலத்திற்குக் காலம்
இனவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், நிதி மற்றும் பொருள் திரட்டல்களையும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகிறோம். இதுவே எக்காலமும் தொடர்கதையாக நீடித்துச் செல்லலாகாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீர்வு காணப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ அதையும் விட ஒருபடி மேலாக இனவாதமில்லாத ஒரு பல்லின மக்கள் வாழும் சுதந்திர நாடாக எமது இலங்கைத் தாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதும் அத்தியாவசியமாகும்.
எனவே ஐக்கிய இராச்சியத்திலும், பிற நாடுகளிலுமாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஸ்ரீலங்காவின் புத்திரர்கள் அனைவரும் 'இனவாதமற்ற இலங்கையை உருவாக்கும்' அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே பெயரில் செயற்படத்தக்கதான ஒரு சர்வதேசக் கூட்டமைப்பினை உடனடியாக உருவாக்கி அக்கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைய வேண்டும் எனவும், எதிர்காலங்களில் நமது தாயகத்தில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இனவாத வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படும்போது இச் சர்வதேசக் கூட்டமைப்பின் மூலம் உலகெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் எமது SLMDI UK அமைப்பானது சக இனங்களையும், மதங்களையும் சேர்ந்த ஸ்ரீலங்காவின் புலம்பெயர்வாழ் உறவுகளை விநயமாகக் வேண்டிக் கொள்கின்றது Sri Lankan Muslim Diaspora Initiative uk\
No comments:
Post a Comment