இலங்கை பாடசாலை மாணவர் சமூகத்தினை டெங்கு நோயினை விட்டும் தடுப்பதற்கான தொழினுட்ப ரீதியான புத்தாக்க கைபேசி செயலி நேற்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மண்டபத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
"டெங்கு அற்ற சிறுவர் ( Denguefreechild) என்ற இந்த செயலியானது கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைகழகம், சிங்கப்பூர் Nanvang தொழினுட்ப பல்கலைகழகம் மற்றும் மொபிடெல் சிறீ லங்கா போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த செயலியினூடாக டெங்கு நோயினை இல்லாதொழிப்பதற்கான வினைத்திறன் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சந்தேகத்திற்குரிய காய்ச்சல், டெங்கு பரவலாம் என சந்தேகிக்கப்படுகின்ற பிரதேசம், நுளம்பு முட்டை விடும் அபாயம் உள்ள இடங்கள் போன்ற தகவல்களை பொது மக்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வதினூடாக அதற்குரிய நடவடிக்கைகள் அவசரமாக முன்னெடுக்கப்படவும் உள்ளன.
டெங்கு நோய் பரவலாம் என சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு முன் கூட்டியே அறிவூட்டப்படவும் இந்த செயலி பயன்படும். சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்களில் 30 வீதமானவர்கள் சிறுவர்கள். நாடு பூராகவும் உள்ள 10,000 பாடசாலைகளில் சுமார் 4.4 மில்லியனுக்கு அதிகமான சிறுவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே சிறுவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பது கட்டாய கடமையாக உள்ளதென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹசித திசேர பெரேரா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் குமார சிறி சிறிசேன, சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் சரத் அமுனுஙம, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸித திசேர உட்பட பாடசாலை மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-Nuzly Sulaim
-Nuzly Sulaim
No comments:
Post a Comment