கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருதை முன்னிலைப்படுத்தி 04ஆம் இலக்க சுயேட்சைக்குழு தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்ததும் அக்குழுவிற்கு மொத்தமாக 09 உறுப்பினர்கள் தெரிவாகியதும் நாமறிந்ததே. இவர்கள் கடந்த 23.03.2018ஆம் திகதியன்று அம்பாறையில் வைத்து கிழக்கு மாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகின்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதென்பது ஒரு வழக்கமான செயற்பாடாக இருப்பதினால் அதுகுறித்து பெரிதாக யாரும் பேசுவதில்லை. ஆனால், மேற்குறித்த சுயேட்சைக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களூடாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த சத்தியப்பிரமாணம் மாத்திரம் பேசுபொருளாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஏனெனில், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை மறுத்து வந்த அனைத்து அரசியற் கட்சிகளையும் எதிர்த்து இம்மக்களின் உணர்வும், தேவையும் தனியான உள்ளூராட்சி மன்றம்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலில் இச்சுயேட்சைக்குழு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு மக்கள் வாக்களித்து ஆதாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நிறைவேற்றியிருந்தனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயம் யாதென்றால், சாய்ந்தமருது, கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து சென்றால், கல்முனை மாநகர சபையின் அரசியல் ஆதிக்கம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்விடும் என்கின்ற தேவையற்ற ஒரு அச்சத்தை பெரும் பூதாகரமாக கல்முனைக்குடி தரப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அது பிழையானது என்பதை செயற்பாட்டு ரீதியாக நிரூபிப்பதே இதில் தங்கியிருந்த அரசியலாகும்.
இதற்காகத்தான் சாய்ந்தமருது மக்களும் யார் எமது பிரதிநிதிகளாகவதற்கு முன்வந்திருக்கின்றார்கள் என்பதை நிறுத்துப்பார்க்காதும், வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை கருத்திலெடுக்காதும் தேவையான இலட்சியத்தை அடைந்துகொள்வதற்காக மாத்திரம் தமது வாக்குப்பலத்தை செலுத்தியிருந்தனர். இது நேரடி களவேட்பாளர்களாக இருந்த பிரதிநிதிகளும் நியமன உறுப்பினர்களான பிரதிநிதிகளும் நன்கறிந்த ஒரு பக்கமாகும்.
ஆயின் குறித்த 09 உறுப்பினர்களும் சராசரி அரசியல்வாதிகளுக்கான பண்புகளோடு மாறிவிடாதும் மக்களின் உணர்வுக்கு முன்னுரிமை அளித்து தாம் எதிர்நோக்கிய இலட்சியத்தை சரியாக அடைந்துகொள்வதற்கு உந்துசக்தியாளர்களாக நமது உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமேயன்றி மாறாக சராசரி அரசியல்வாதத் தனங்களுடன் தங்களை காட்சிப்படுத்த முனைப்புக்கொள்வதென்பது நோக்கத்தை சிதைவடையச்செய்து வரலாற்றுத்துரோகிகளாக அவர்களை பதிவு செய்யும் அடையாளத்தை பெற்றுவிடுகின்ற ஆபத்தும் இதிலிருப்பதை உணர்ந்தவர்களாகச் செயற்படல் வேண்டும்.
சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் வெற்றி என்பது அதன் வேட்பாளர்களினதும், இக்குழுவின் இயக்க செயற்பாட்டாளர்களினதும் புத்தி சாதுர்யத்தினதும் வெற்றி என்று கருதி மிதப்பில் தங்களை உட்படுத்துவார்களேயானால் அது பெரும் கைசேதத்தை அவர்களுக்கு கொடுத்துவிடும். இங்கு அரசியல்தனங்களை விட மக்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பெறுபேறாக நம்புவதை ஒரு கணமேனும் மறந்துவிடாத ஜாக்கிரதை முக்கியமானது. அதில்தான் நமது அரசியல் காய் நகர்த்தல்களின் வெற்றி தங்கியிருக்கின்றது என்பதும் யதார்த்தமாகும்.
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் போதும் அதன் பெறுபேறுகள் கிடைத்ததற்கு பிற்பாடும் நமது உள்ளூராட்சி பிரதிநிதிகளும், அவர்களை இயக்கியவர்களும் தெளிவான ஒரு அறிவிப்பை அதாவது, கல்முனை மாநகர சபையில் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பதவிகளையும் பெறுவதையோ அதற்கான வாக்கெடுப்பு நிகழுமாயின் அதில் கலந்துகொள்வதுமில்லை என்பதை உறுதிபட தெரிவித்திருந்தனர். அப்படியானால், எந்த அரசியல் கட்சிகளுக்கும் தமது ஆதரவை வழங்குவதில்லை என்கின்ற கருத்தை இது உட்கிடையாக வெளிப்படுத்தியிருந்தது.
இதை வைத்துத்தான் இவர்களின் சத்தியப்பிரமாணம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதன் பின்னணியாகும். ஆளுனர் பதவி என்பது நேரடியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஓர் அரசியல் பதவியாகும். அந்தவகையில் கிழக்கு மாகாண சபை ஆளுனர் ஜனாதிபதி சார்ந்த கட்சி தரப்பை சார்ந்தவர் என்றே பார்க்கப்படும். ஏனெனில், இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரை கட்சிகளுக்கப்பாலான ஒருவராக செயற்படுவதை விடுத்தும் அவரொரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக செயற்படுவது நாம் அறிந்ததே. அதுமட்டுமன்றி இன்றைய ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருப்பதும் நாடறிந்த ஒன்றாகும்.
இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால், அம்பாரையில் வைத்து ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்கின்ற போது அங்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் பிரசன்னமாகியிருந்தார். இவர் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது மட்டுமன்றி அவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவுத் தளத்தை கொண்டவராக இருப்பதும் ஒரு பகிரங்கமான செய்தியாகும். இத்தகைய நிலையில் இவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை என்பது இக்கட்சிகளின் பின்னால் எமது உள்ளூராட்சி பிரதிநிதிகள் செல்ல தொடங்கிவிடுகின்றனர்களா? என்கின்ற ஒரு ஐயப்பாட்டின் மேற்கிளம்புதல்தான் இந்த சலசலப்பும் விமர்சனங்களும் எழுவதற்கு காரணங்களாக அமைகின்றன.
எதிர்வரும் 02.04.2018இல் கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வு நடப்பதற்கான அறிவித்தல்கள் வெளியாகியிருக்கும் இத்தருணத்தில் மாற்றுக்கட்சி சார்ந்தவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிய எந்தத் தேவையும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களுக்கு இல்லை என்று சொல்வதைப்பார்க்கிலும் வேறொரு பிடிக்குள் அகப்பட்டுவிடுகின்ற ஒரு சூழல் இதற்குள் மறைமுகமாக வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இந்த அச்ச உணர்வின் எச்சரிக்கைதான் விமர்சன்ங்களை அதிகம் கொண்டுவந்ததற்கு இன்னொரு காரணமாகச் சொல்லலாம்.
உண்மையில் ஒரு சட்டத்தரணி அல்லது சமாதான நீதவான் போன்ற ஒருவர் முன்னால் கூட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முடியும். இந்த 09 உறுப்பினர்களில் ஒருவர் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த நடைமுறையை விளங்காமல் அல்லது தெரியாமல் ஆபத்தாக விரிக்கப்படுகின்ற வலைக்குள் தாங்களாகவே வீழ்ந்து விடுவார்களோ என்று பயப்படுவது பிழையான நிலைப்பாடு அல்ல.
நமது ஊர் மக்களின் பெரும்பகுதியினர்கள் நமது தேவையான தனியான உள்ளூராட்சி மன்றத்தின் மீதான பற்றின் அடிப்படையில் ஒருமித்து வாக்களித்து அரசியல் பிரதிநிதித்துவத்தை ஓர் அமானிதமாக ஒப்படைத்திருந்தனர். அதுமாத்திரமன்றி தேர்தல் காலங்களில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு செயற்பாடுகளையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி மக்களின் அனுசரணையோடு தேர்தலை எதிர்கொண்ட நாம் அம்மக்களின் முன்னிலையில் நமது ஜும்மாஆ பள்ளிவாயலை முன்னிறுத்தி அதன் தலைவர் , பேஷ் இமாம் போன்ற பிரமுகர்களின் பிரசன்னத்தோடு ஆகக்குறைந்தது அகில இலங்கை சமாதான நீதவான் ஒருவரை முன்னிலையாக வைத்து நமது சுயேட்சை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணத்தை செய்திருக்க முடியும். இந்த எதிர்பார்ப்பு நிலைகுலைந்ததன் காரணமாகவும் சத்தியப்பிரமாணத்தின் மீதான சலசலப்பும் சர்ச்சையும் தோற்றுவிப்பதற்கு வழியாகியிருக்கின்றது.
இந்த பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு அணிகளோடு சங்கமித்துக்கொள்கின்ற ஒரு நிலைப்பாட்டுக்கு நாம் உடனடியாக வரமுடியாது. மாறாக அக்கட்சியினால் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்துக்கான எதிர்கால திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய பின்னர்தான் அவர்களோடோ அல்லது இதைத்தருகின்ற வேறு யாருடனோ நமது உறவை நெருக்கமாக அல்லது இணைந்ததாக ஆரம்பிக்க முடியும். இந்நிலை தோன்றும்வரை நாம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளர்களாக மாற வேண்டிய தேவை இல்லை.
அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றப் பிரகடனத்தை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்பு பலத்த கேள்விக்கு மத்தியிலேயே இருக்கின்ற ஒன்றாகும். அதேநேரம் அரசியல் அதிகாரத்துவத்தின் உச்சப்பயனாக குறித்த உள்ளூராட்சி அமைச்சர் அவருக்கான அதிகாரத்தினைப் பயன்படுத்தி வர்த்தமானியை வெளியிடுவதன் மூலமே சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படுவதன் சாத்தியம் தங்கியிருக்கின்றது.
இந்நிலையில், நாமாக எந்தக் கட்சிகளிடமும் சென்று அவர்கள் தரக்கூடிய வெறும் வாக்குறுதிகளை நம்பி அவர்களோடு இணைந்து பயணிப்பதற்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. இந்த அவதானத்தின் அடிப்படையில் எதிர்வருகின்ற 20.04.2018 வரைக்கான காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அரசியல் கட்டமைப்பு அமைந்துவிடும். இதன் பிற்பாடுதான் நாமாக அரசியல்வாதிகளை அணுகுவதற்கான ஏற்பாடுகளின்பால் திரும்ப வேண்டும். அதுவரை பொறுமையோடு இருப்பதுதான் நமக்கு நயம் பயக்கக்கூடியதாக அமைய முடியும்.
இதற்கப்பால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, உள்ளூராட்சி மன்றங்களை அரசியல் அதிகாரங்களை கட்டமைப்பதில் காணப்படுகின்ற இழுபறிகள், உள்நாடு, வெளிநாடுகளில் காணப்படுகின்ற அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் இன்னோரன்ன நிலைப்பாடுகள் காணப்படுவதினால் அதற்கு முன்னால் நமது தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை சிறியதொரு புள்ளியாக அமைவதும் தவிர்க்க முடியாது.
கல்முனை மாநகர சபையை பொறுத்தவரை சில வேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ந்த ஒரு சபையாக அமைப்பதற்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து முஸ்தீபுகள் எடுக்கப்படலாம். அவ்வாறான ஒரு சூழல் தோன்றுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினரை மாநகர முதல்வராக பிரேரித்து அவருக்கான ஆதரவை வழங்குபவர்களாக நமது சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 09 பேர்களையும் ஆதரவு வழங்கக் கேட்கலாம். இவ்வாறான ஒரு பொறிக்குள் அகப்படுவதென்பது நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமனாகிவிடும்.
சாய்ந்தமருது பிரதிநிதிகள் இல்லாமலும் , கல்முனையின் ஏனைய பகுதிகளிலிருந்து தெரிவாகக்கூடிய தமிழ் உறுப்பினர்களின் தயவின்றியும், கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் தனி முஸ்லிம் தரப்பினரிடம், வரமுடியும் என்பதை தத்ரூபமாகவும், நடைமுறை ரீதியாகவும் எண்பித்தல் என்கின்ற நமது நோக்கம் பிழைத்துவிடும். ஏனெனில், நமது சாய்ந்தமருது தயவும் ஏதோ ஒரு வகையில் தமிழ் பிரதிநிதிகளின் உதவியோடும்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்புடைய ஆட்சி நிலை கல்முனை மாநகர சபையில் வரமுடியும்.
எது எவ்வாறிருந்தாலும் எமது சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் அரசியலுக்குள் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் செல்வாக்கு படிப்படியாக உள்நுழைந்து வருகின்றதா என்கின்ற ஒரு ஐயப்பாடும் வலுத்து வருகின்றது. இதற்கு இரண்டு சம்பவங்கள் ஆதாரப்படுத்துவது போன்று அமைகின்றது. ஒன்று சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர்களை அறிவிப்பதற்கு சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவை இச்சுயேட்சைக்குழு செயற்பாட்டாளர்கள் சந்தித்திருந்தமை. இரண்டாவது இச்சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தின்போது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பிரசன்னமாகியிருந்தமை.
இவ்விரு சம்பவங்களுக்கும் நியாயங்கள் சொல்வதற்கு சுயேட்சைக்குழு தரப்பினர்கள் முன்வரலாம். நமது ஊருக்கான தனித்துவ உள்ளூராட்சி மன்றத்தை அடைந்துகொள்வதற்கு ஜனாதிபதி மட்டம் தொடக்கம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் வரை எடுத்துச் செல்வதற்கு ஓர் ஊடகம் தேவை. அதன் நிமித்தமாகவே நாம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவை பயன்படுத்துகின்ற நோக்கமேயன்றி வேறில்லை என்று அடித்துக்கூற இவர்களால் முடியும். இங்கு இரண்டு விடயங்களை நாம் மிகுந்த அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதில் இதய சுத்தியுடன் செயல்படுவாரா? அதற்கான அறிகுறிகள் இவரிடம் ஏலவே காணப்பட்டதா? என்ற வகையில் ஆராய வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஆகிய தரப்புக்களிடம் எமது நியாயபூர்வமான தேவையை முன்வைத்து கலந்துரையாடி உடன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசியல்வாதி என்ற அடிப்படையில் அதாவுல்லாவினால் மாத்திரம்தான் முடியுமான விடயமா என்பது குறித்தும் இதில் நோக்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த 2010-2015 வரையான காலப்பகுதிகளில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுல்லா இருந்திருக்கிறார். அதுமாத்திரமன்றி அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்திருக்கிறார். 2015ஆம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலின்போது கூட முஸ்லிம் மக்களின் பெரும்பகுதியினர்கள் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க வெளிப்படையாக துணிந்தபோது கூட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மக்களின் பக்கம் வெளியேறி வராது கொள்கையின் பக்கம் பிடிப்போடு மகிந்தவின் தரப்பில் நின்ற ஒருவருமாவார்.
கல்முனை மாநகர சபையிலிருந்து இன்னும் புதிதாக மூன்று சபைகள் உருவாக்கப்பட்டு மொத்தமாக நான்கு சபைகளாக அவை மாற வேண்டுமென்கின்ற கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக 2009களிலிருந்து இக்கட்டுரை எழுதும்வரை அவரது பிடிமான கருத்தாகவும், நியாயமாக அவர் காண்பதாகவும் பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்ற ஒருவருமாகவே அவர் காணப்படுகின்றார்.
இப்படி பகிரங்கமாக சரி எனவும் இன்று வரை பேசிக்கொண்டிருக்கின்ற அவரிடம் குறித்த அமைச்சு இருந்தபோது யாரையும் கேட்காது அவரது விருப்புக்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துவிட்டு செய்திருக்க முடியும். இப்பிரச்சினையை ஒரு வாக்கு வேட்டையாகவோ, அரசியல்தனமாகவோ பயன்படுத்துகின்ற எண்ணம் அறவே இல்லாத ஒரு தூய்மையாளராக, சமூக நலன் சார்ந்த சிந்தனையாளராக அவர் இருப்பதன் காரணமாக கல்முனை நான்கு சபைகளாக மாற வேண்டுமென்ற எண்ணம் அமைந்திருந்தால் அவரது குறித்த அமைச்சுப்பதவிக் காலத்திலேயே செய்து முடித்திருப்பார்.
கடந்த ஆண்டில் கல்முனைக்குடி தரப்பினர்களுக்கும் சாய்ந்தமருது தரப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அமைச்சில் நடக்கின்றபோது கல்முனை ஒரே நேரத்தில் நான்கு சபைகளாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே முன்னாள் அமைச்சர் அதாவுல்லா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். உண்மைக்கு உண்மையாக அவர் அந்த இட்த்தில் நியாயம் சொல்பவராக இருந்திருந்தால் அன்றிருந்த சூழலில் ”சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை திகதியிட்டு வர்த்தமானியில் அறிவிப்பதென்றும், கல்முனை பிரதேச செயலகத்தை மையப்படுத்தி ஏனைய மூன்று உள்ளூராட்சி பிரிப்புக்களையும் செய்வதற்கான ஓர் ஆணைக்குழுவை நியமிப்பது” என்று சொல்லியிருக்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டை செய்வதற்கு அவர் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்தபோதும் முன்வரவில்லை, அரசியல் அதிகார பலம் இல்லாத சூழலிலும் தன்னை மாற்றிக்கொள்ளாத இவர் மீது இக்கோரிக்கை மீது பற்றுள்ள சாய்ந்தமருது மக்களோ அதற்காக புறப்பட்டிருக்கின்ற இன்றைய கல்முனை மாநகர சபை சார்ந்த நமது ஊர் பிரதிநிதிகளோ இவர்களை இயக்குகின்ற செயற்பாட்டாளர்களோ எந்தவகையில் நம்பிக்கை வைக்க துணிந்திருக்கிறார்கள் என்பதைப் பகிரங்கப்படுத்துவார்களா?
இப்போது அரசியல் அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்குள் மீண்டும் பிரவேசித்துள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் அரசியல் நலன், வாக்கு நலன் என்பதற்கு அப்பால் நின்று சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையில் செயற்படுவார் என்பதை அவர்தான் நமது மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய கடப்பாடுடையவராக இருக்கின்ற போது அவரை நாம் நம்பி கால் வைப்பது பொருத்தமா என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.
அம்பாரை மாவட்டத்தின் நேரடி களஅரசியலோடு சம்பந்தப்படாத ஏனைய மாவட்டங்களை சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லது நியாயமாக சிந்திக்கின்ற சிங்கள அரசியல்வாதிகளூடாகவேனும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா போன்றோர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான வழிகள் அடைக்கப்பட்ட ஒன்றல்ல. அவற்றினை நாம் நாடுவதற்கும் தேடுவதற்கும் எங்களை உட்படுத்திக்கொள்ளக்கூடிய சூழல் இருந்தும் அதுபற்றி பாராமுகமாக இருப்பது நமது பாரத்தை இறக்கத்தெரியாத கோணம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற விடயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கிம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நமக்கு நம்பமுடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். இதற்கு இருக்கின்ற ஒரு மாற்றுவழிதான் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா என்று நாம் நம்பக்கூடாது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் , ரிஷாட் பதியூதினை போன்று நம்ப முடியாத ஒருவர்தான் அதாவுல்லாவும் என்பதை இப்போதைக்கு நமது மக்கள் மறந்துவிடக்கூடாது.
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
No comments:
Post a Comment