பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 March 2018

பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்: ஹிஸ்புல்லா



திகன உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்..

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“எல்லோருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும். அரசியல் வாதியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் மதத் தலைவராக இருந்தாலும் சட்டம் சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். 1983 கலவரம் முதல் கலவரங்களினால் உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க சில சக்திகள் முயல்கின்றன.

கடந்த அரசில் இடம்பெற்ற அளுத்கம சம்பவத்தை தொடர்ந்து சிறுபான்மை சமூகங்கள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அளுத்கமவையை விட மிக மோசமான சம்பவங்கள் இந்த நல்லாட்சியில் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறையின் போது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பாரத்துள்ளனர். பொலிஸார் தமது துப்பாக்கிகளை பயன்படுத்தியிருந்தால் வன்முறையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதன்போது வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. 
பொலிஸாரின் முன்னிலையில் பள்ளிவாசல்கள் தாக்கி எரிக்கப்பட்டன. பொலிஸார் சரிவர செயற்பட்டிருந்தால் நிலைமை மோசமடையாமல் தடுத்திருக்கலாம். இது மிலேச்சத்தனமான நாடு என்ற அவமானம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட இந்த சம்பவம் காரணமானது. நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள நிலையில் இந்த கலவரம் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

கண்டி பிரதேசம் பற்றி பொலிஸ்மா அதிபருக்கு நன்கு தெரியும். அவர் பொலிஸுக்கு பொறுப்பாக இருந்த நிலையில் தான் இந்த கலவரம் நடந்தது. பொலிஸார் தமது கடமையை நிறைவேற்றாதது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த கலவரம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர், கண்டி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட சகல பொலிஸாரும் பொறுப்பு கூற வேண்டும். 

இந்த சம்பவம் தொடர்பில் சிலர் மட்டுமே கைதானார்கள். சம்பந்தப்பட்ட பலர் இன்னும் கைதாகவில்லை. சிலரை கைது செய்து விட்டு பிரச்சினை முடிந்து விட்டதாக ஏமாற்ற முயலக் கூடாது. 

யுத்த காலத்தில் நாட்டை பாதுகாத்த இராணுவம் கலவரங்களின் போதும் அமைதியை ஏற்படுத்த பங்களித்தது. இதற்கு நாம் இராணுவத் தளபதிக்கு பாராட்டுக்களையும் - நன்றியையும் தெரிவிக்கின்றோம். 
சிங்கள பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. 


கிந்தோட்டை, அம்பாறை, திகன போன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது. 
இது ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. அத்தனை இனங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. எமது ஆடை மற்றும் கலாசாரம் குறித்து யாரும் எமக்குக் கற்றுத் தரத் தேவையில்லை. எமது மார்க்கக் கடமை, அரசியல் செய்யும் உரிமை, கலாசாரம் என்பற்றை பாதுகாத்து செயற்பட கூடிய சுதந்திரம் வேண்டும். 

கண்டி சம்பவத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.” என்றார். 

-R. Hassan

No comments:

Post a Comment