அம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்: ACJU - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 February 2018

அம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்: ACJU



முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. 

நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சி காண வைக்கவும் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் சிலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றன. அம்பாறையிலும், கிந்தோட்டையிலும் நடந்தேறிய அடாவடித்தனங்கள் இதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
புனித பள்ளிவாசல்களில்  கை வைக்கும் துணிகரத்தை எவரும் சகிக்க மாட்டார்கள். அடிக்கடி முஸ்லிம்களுக்கெதிராக செய்யப்படும் இந்த அநியாயங்களையிட்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒன்றும் பேசாதிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழ காரணமாகியுள்ளது.

கருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை பெண்களின் உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களை பரப்பி அப்பாவி மக்களை துன்புறுத்தும் இவ்வீனச் செயலை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டிக்காமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.
இந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக பல்வேறு வழிகளிலும் தியாகங்களை செய்துள்ளார்கள். அவற்றை எல்லாம் மறந்து பெரும்பான்மையினரில் சிலர் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உரியவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் காவல்துறையும் செயல்படாதிருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இன ஐக்கியத்தையும், சமூக ஒற்றுமையையும் நாட்டில் மலரச் செய்வானாக.

அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment