அம்பாறை: நல்லாட்சி அரசாங்கம் நழுவக் கூடாது: மு.ரஹ்மான் - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 February 2018

அம்பாறை: நல்லாட்சி அரசாங்கம் நழுவக் கூடாது: மு.ரஹ்மான்


நேற்று இரவு அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டை கண்டித்தும் இதற்குக் காரணமானவர்களை தேடிப்பிடித்து தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அரசாங்கத்தை வேண்டியுள்ளார்.


அம்பாறை நகரில் ஏற்பட்ட இன வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தனதறிக்கையில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டதாவது,

நேற்று 26.02.2018 இரவு சில இனவாதிகள் இலங்கையின் கிழக்கு மாகாண அம்பாறை  நகரிலுள்ள பள்ளிவாசளுக்கும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளுக்கும் அடித்து உடைத்து தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர். 
முஸ்லிம் உணவு விடுதியொன்றில் ஏற்பட்ட சச்சரவு ஒன்றை மையமாக வைத்தே இனவாதிகள் மேற்படி திட்டமிடப்பட்ட தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கும் முறையைப் பார்க்கும் போது இது நன்றாகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒன்று என்பது தெளிவாகிறது.

நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்த இனவாத சக்திகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கி நல்லாட்சியின் உருவாக்கத்திற்கு உரமாக, உறுதுணையாக இருந்த சிறுபான்மை சமூகங்களை சீண்டி வந்திருக்கின்றன. 



நல்லாட்சியின் வருகையோடு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் மீது பலதரப்பட்ட இனவாத செயற்பாடுகள் அரங்கேறின. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிலையங்கள் தீவைக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மோசமான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. 

நல்லாட்சி அரசாங்கத்தில் கிந்தோட்டையில் முதலில் இந்;த அரங்கேற்றப்பட்டது. கிந்தோட்டையில் கூட சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள் கூட ஒழுங்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்தனர். 

2015 ஜனவரியில் தோற்கடிக்கப்பட்ட இனவாத சக்திகள் அடிக்கடி தலைதூக்கி இத்தகையை நாசகார செயல்களை அரங்கேற்றி வருகின்றன. நல்லாட்சி அரசாங்கம் கூட இத்தகைய இனவாத சக்திகளை முடக்குவதில் பாராமுகமாக இருப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் இனவாத சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி ஒரு புது தெம்பை வழங்கியிருக்கிறது. ஓடி ஒழிந்து மறைந்திருந்த இனவாதிகள் வீதிகளில் துணிச்சலுடன் இறங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இனவாதிகளை அடக்குவதில் நல்லாட்சி காவல்துறை காட்டும் அசமந்தப் போக்கும் இந்த இனவாதிகளுக்கும் இந்த இனவாதிகளை பின்னணியில் நின்றும் இயக்கும் அரசியல்வாதிகளுக்கும் தைரியத்தை ஊட்டி வருகிறது.

காலி கிந்தோட்டை சம்பவம் முதல் நேற்றைய அம்பாறை சம்பவம் வரை இனவாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது.

நேற்றைய அம்பாறை சம்பவத்தின் போது பொலிஸாரின் முன்னிலையிலேயே இந்த இனவாதக் காடையர்கள் அசம்பாவிதங்களை அரங்கேற்றியுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் 300 மீற்றர் இடைவெளியே இருந்திருக்கின்றன. காவல்துறையினர் இந்த அசம்பாவிதங்களை கைகட்டிப்பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். 

பிரச்சினை இடம்பெற்ற உணவு விடுதியை தாக்கிய இனவாதக் காடையர்கள், முஸ்லிம்களின் உடைமைகளையும் தாக்கி தீ வைத்து சேதப்படுத்தி விட்டு சுமார் ஒன்றரை கி.மீற்றருக்கு அப்பால் உள்ள அம்பாறை பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்து பள்ளிவாசலை தாக்கியுள்ளனர். இதன்போது அம்பாறை பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும், எதிர்வினையாற்றலையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

பொலிஸ் நிலையமும், இராணுவ முகாமும், விமானப்படை முகாமும், விஷேட அதிரடிப்படை முகாமும் இருக்கும் அம்பாறை நகரில் இடம்பெற்ற இந்த முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையை தடுக்க அரச பாதுகாப்பு இயந்திரத்திற்கு இயலாமல் போயிருப்பது எம்மை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது.

இனியும் பார்த்திருக்காது இனவாத அரசியல் சக்திகளினால் திட்டமிட்டு வளர்க்கப்படும் இந்த இனவாத அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

குறித்;த சம்பவத்தின் போது கடமை தவறிய பொலிஸார் மீதும் வன்முறையில் ஈடுபட்ட இனவாதிகள் மீதும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இரண்டு நாட்களுக்குள்ளேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டத்திலேயே இனவாதிகள் தமது ஆட்டத்தை ஆரம்பித்து காட்டியுள்ளனர். இதற்கான ஒழுங்கான உண்மையான இதயசுத்தியுடனான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் மஹிந்தவின் அரசியலுக்கும் நல்லாட்சியின் அரசியலுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதை ஆணித்தரமாக முன்வைக்கிறேன்.  

நல்லாட்சி ஆட்சியில் காலி கின்தோட்டை முதல் இன்றைய அம்பாறை வரை இனவாதிகளின் அசம்பாவிதங்கள் தொடர்ந்திருக்கின்றன. இதற்கு இன்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த இனவாத அலையை தடுத்து நிறுத்தி இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பிலிருந்து நல்லாட்சி அரசாங்கம் நழுவிப்போக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment