அம்பாறை: அசிங்கப்பட்டு நிற்கும் 'முஸ்லிம்' அரசியல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 February 2018

அம்பாறை: அசிங்கப்பட்டு நிற்கும் 'முஸ்லிம்' அரசியல்!



யானையைப் பிடித்துக் கட்டிப் போடும் வாய்ப்பு கிடைத்து விட்டதாகவும் யானையை அடக்கப் போவதாகவும் சூளுரைத்து உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்குப் பிச்சை கேட்ட முஸ்லிம் அரசியல் மீண்டும் ஒரு தடவை இன்று அம்பாறையில் அசிங்கப்பட்டு நிற்கிறது.


பேரினவாதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க இயலாது எனினும், வன்முறைச் சம்பவம் ஒன்று இடம்பெறுகிறதென்றால் அதனை உடனடியாக நிறுத்துவதற்கும், கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவற்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியாத அந்த பாழாய்ப் போன அதிகாரத்தை வைத்து இதுவரையிலும் இனியும் முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ளப் போவது என்ன எனும் கேள்வி மீளெழுகிறது.

இனவாத அடிப்படையில் தக்க வைத்துக் கொள்ளும் அதிகாரத்தைத் தம் இனத்தின் நலன் காக்கப் பிரயோகிக்க முடியாத கையாலாகாத நிலையில் தூர நின்று கண்டனங்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுத் தம் கடமையைச் செய்த திருப்தியில் முதுகைக் காட்டி நிற்கும் முஸ்லிம் அரசியல் இன்றொரு தினமாவது கூட்டாக வெகுண்டெழுந்து குரல் கொடுக்குமா என்று தேடிப் பார்த்தால் விடிந்ததிலிருந்து ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



கட்சி பேதங்களுக்கப்பால் இவர்களால் ஓரணியில் திரண்டு நள்ளிரவில் அரங்கேற்றப்பட்ட காடைத்தனத்தை தமிழில் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தாம் கட்டிப்போட்டிருக்கும் யானையின் தலையைக் கொண்டு வேடிக்கை பார்த்த காவற்துறைக்கு எதிரான காத்திரமான நடவடிக்கையை எடுக்க முடியுமா என்று அப்பாவிப் பொது மகன் சிந்தித்துக் கொண்டேயிருக்கையில் மாயக்கல்லியில் நிலையாகக் குடியேறிவிட்ட சிலையும் கூடத் தான் சிரிக்கிறது.


ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்க, சாதாரண வியாபாரியும் அவன் சார்ந்த சமூகமும் எந்த அம்பாறையை மையமாக வைத்து முஸ்லிம் உணர்வூட்டலும், போலித் தேசியமும் முன் வைக்கப்படுகிறதோ அதே அம்பாறையில் நாதியற்றுப் போயுள்ள நிலை காண யாருக்குத் தான் வேதனை வராது?

ஆனாலும், இவர்களால் ஒன்றும் செய்ய முடியது! முடிந்தால் கொழுந்து விட்டு எரிந்த தீயை வேடிக்கை பார்த்த நான்கு காக்கிச் சட்டைகளையாவது இடமாற்றம் செய்து காட்டுமா இந்த போலித் தலைமைகள்?

-அ.நவாஸ்

No comments:

Post a Comment