ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் பயனாக இனிமேல் ஜெனீவா முன்னால் சென்று குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாதென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், துமிந்த திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது,
கடந்த ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து இந்த நாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை தொடர்ந்து இந்த அரசாங்கத்திற்கும், முன்னைய ஆட்சியாளருக்குமிடையிலிருந்த வேறுபாட்டை ஒப்பிட்டு நோக்கும் பொழுது,தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,2009 ஆம் ஆண்டு கோர யுத்தத்தை வெற்றிக்கொண்ட பின்னணியில், இந்த நாடு படிப்படியாக சமாதானத்தை இழந்துகொண்டு வந்தது என்பதுதான். சமாதானத்தை இழக்கின்ற ஒரு சூழ்நிலை அப்பொழுது இவ்வளவு வேகமாக உருவாகிவிடும் என நாங்கள் முன்னர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.
எங்களுடைய அரசிற்கு ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், நாங்கள் மிகுந்த திருப்தியோடு திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு யுகத்தை உருவாக்கியிருக்கிறோம் என மிக மகிழ்ச்சியோடு கூறிக்கொள்ளலாம்.
2010,2011,2012,2013,2014 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் நாள் தோறும்சமய ரீதியான, இன ரீதியான வன்முறைச் சம்பவங்கள்,அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருந்தன. அவ்;வாறானதொரு மோசமான சூழ்நிலையை உருவாக்கிய ஆட்சியாளர்களை ஒதுக்கிவிட்டு, புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கியது மாத்திரமல்ல, வெளிப்படைத்தன்மையுள்ள ஒரு அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வெளிப்படைத்தன்மை அரசியல் கலாசாரத்தின் மூலம் இந்;த நாட்டில் இடம்பெற்ற மத ரீதியான அசம்பாவிதங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது மாத்திரமல்லாமல்,சர்வதேசத்திற்கு முன்னால் ஒவ்வொரு வருடமும் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றதை போன்று அவமானப்படுத்தப்பட்ட ஒரு தேசியமாக இருந்த நாங்கள் இப்போது தைரியமாக அதே சர்வதேச சமூகத்திற்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.
நிலையான ஜனநாயக பாரம்பரியங்களுடனானதும்,இனங்களுக்கிடையே சமத்துவம், சகோதரத்துவம், இணக்கப்பாடு என்பனவற்றை கொண்டதுமான ஒரு புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்குகின்ற தகைமை இந்த புதிய ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது என்று பிரதான வல்லரசு உட்பட இந்நாட்டுக்கு வருகை தருகின்ற பிரபல இராஜதந்திரிகள் எங்களுடைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராட்டு தெரிவிக்கின்ற நிலைமையை தோற்றுவித்திருக்கிறோம்.அதையிட்டு நாங்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும்.
இலங்கைக்கெதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு நாடு ஓரங்கட்டப்பட்டது. நாடு பலவீனமான நிலைக்குள்ளானது. ஜனாதிபதியும், பிரதமரும் தேசிய அரசாங்கம் என்ற சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதன்; மூலம் ஆண்டுதோறும் ஜெனீவா சென்று எங்களது தரப்பில் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட்டு இரண்டு வருட கால அவகாசம் கிடைத்திருக்கின்றது.ஆனால், இனி ஜெனீவாவுக்கு முன்னால் போய் கைகட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை என நம்புகின்றேன். வெளிநாட்டு உயர்மட்ட குழுக்கள் இங்கு வந்து நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் நல்லிணக்கத்தை பற்றி நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
புதிய முயற்சிகளை சர்வதேச அங்கீகாரத்தோடு நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, வெளிப்படைத் தன்மையை வெளிக்கொணர்கின்ற தகவல் அறியும் சட்ட மூலம் குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு பெரிதும் பயன் தரக் கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. எந்த நிறைவேற்று அதிகார தரத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, எந்தத் தகவல்களையும் ஊடகவியலாளர்களிடமிருந்து மறைக்க முடியாது. அதன் மூலம் ஊழல் கலாசாரத்தை முழுமையாக துடைத்தெறியக் கூடிய ஒரு புதிய யுகத்தை நாங்கள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் ஊடாக அமல்படுத்த இருக்கின்ற சட்டமூலத்தினால் நடைமுறைப்படுத்த இருக்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு,தேர்தல் முறை என்பனவும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, சகல சமூகங்களும் திருப்தியடையக் கூடிய விதத்தில் அவற்றை கொண்டுவருவதற்கு உத்தேசித்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவற்றை குழப்புவதற்கு சில சதி முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் அவற்றிற்கு சற்றும் சளைக்காமல் திராணியுடன் முகங்கொடுத்து மக்களுக்கு முன்னால் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு ஒரு வருட நிறைவோடு புதிய உத்வேகத்துடனும் உற்சாகத்தோடும் இந்த சதி முயற்சிகளை முறியடிப்பதற்குஅநேக கட்சிகள் ஒன்றிணைந்த இந்த தேசிய அரசாங்கம் முன்வர வேண்டும்.
-இக்பால் ஜம்சத்
No comments:
Post a Comment