உத்தேச புதிய அரசியலமைப்பு, உத்தேச தேர்தல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இருப்பு, பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிலைப்பாடு பற்றிய கருத்தொருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் முக்கியமான கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பு 07இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் புதன்கிழமை (30) நண்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர சபை மேயருமான நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாறூக், கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதுவருடத்தில் இலங்கை அரசியலில் ஏற்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களில் பொதுவாக நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவதோடு, அவ்வாறான விவகாரங்களில் சிறுபான்மையினர் ஒருமித்த நிலைப்பாட்டை கையாள்வது மிகவும் பயனுள்ளதாக அமையுமென்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டதோடு, தொடர்ந்தும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
- Jamsath Iqbal
No comments:
Post a Comment