மூதூர் கிழக்கு: தனியான கல்விக்கோட்டம் ஏற்படுத்தக் கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

மூதூர் கிழக்கு: தனியான கல்விக்கோட்டம் ஏற்படுத்தக் கோரிக்கை


திருகோணமலை, மூதூர் கிழக்குப் பிரதேசத்திலுள்ள 30 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகளை இணைத்து தனியானதொரு கல்விக் கோட்டத்தை உருவாக்குமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் தற்போது மீளவும்; வேண்டுகோள் விடுக்கின்றது.

இது தொடர்பான வேண்டுகோளை ஏற்கெனவே கடந்த பெப்ரவரி மாதம் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணனிடம் தமது சங்கம் விடுத்தது. ஆனால், தமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு எதுவித நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா, இன்று செவ்வாய்க்கிழமை(29) தெரிவித்தார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், 'மேற்படி தனியானதொரு கல்விக் கோட்டத்தை உருவாக்குவது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரிடம்; ஏற்கெனவே கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து, இதற்கான மனுவைக் கையளித்தது. அதில் மூதூர் கிழக்குப் பிரத்தேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் இணைந்த தனியான கல்விக் கோட்டத்தின் சமகாலத்தேவை நியாயப்படுத்தப்பட்டிருந்தது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'திருகோணமலை, மூதூர் கிழக்குப் பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி;. இங்குள்ள 30 பாடசாலைகள்; அனைத்தும் குறைந்தளவான அடிப்படை வசதிகளுடன் இயங்குகின்றன. மேலும், இங்குள்ள பாடசாலைகளுக்கு வளப்பகிர்வுகளும் ஒழுங்காக மேற்கொள்ளப்படுவதில்லை.

இவ்வாறிருக்க, இதுவொரு பெருநிலப்பரப்புப் பிரதேசமென்பதால், இங்கு ஆசியர்களும் கல்வி அதிகாரிகளும் பயணிப்பதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் பெரும்பாலும் இல்லை.  பாடசாலைக்கும் மூதூரிலுள்ள வலயக் கல்வி மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைக்குச் செல்லும் ஆசிரியர்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கும்; ஆளாகின்றனர்.

எனவே, மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தனியானதொரு கல்விக் கோட்டத்தை உருவாக்குவதன் மூலம் அப்பிரதேச அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வு காணமுடியும். இந்த வேண்டுகோளை அக்கறையுடன் பரிசீலித்து உதவுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- எப்.முபாரக்

No comments:

Post a Comment